வடக்கு புகையிரத மார்க்கத்தின் மகோ – ஓமந்தை வரையான புகையிரத மார்க்கத்தை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் நேற்று (08.01) போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் தலைமையில் சர்வ மத வழிபாடுகளுடன், மதவாச்சி புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 பில்லியன் ரூபா செலவாகும் இத்திட்டமானது இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. இந்நாட்டின் பல புகையிரத மார்க்க புனரமைப்பு திட்டங்களுடன் கைக்கோர்த்த இந்தியாவின் IRCON International கம்பனியானது இந்த திட்டத்தின் நிர்மானப்பணிகளையும் மேற்கொள்கின்றது.
‘2023ம் ஆண்டின் இலங்கையின் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கபட்டுள்ளது. விசேடமாக இலங்கை போக்குவரத்து கட்டமைப்பிற்கும், வடக்கு புகையிரத மார்க்கத்தினை பயன்படுத்துகின்றவர்களுக்கும் இன்றைய தினம் மிகவும் சந்தோஷமான தினம் என கூற முடியும்.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படினும், இந்திய அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் இப்பாரிய திட்டத்தினை ஆரம்பிக்க முடிந்தமையினை முன்னிட்டு இலங்கையர்கள் எனும் ரீதியில் நாம் அனைவரும் சந்தோஷப்பட வேண்டும்.’ என கலாநிதி பந்துல குணவர்தன இந்நிகழ்வின் போது தெரிவித்தார்.
‘வடக்கு புகையிரத மார்க்கத்தின் மாகோ – ஓமந்தை இடையிலான பகுதியானது மிக நீண்ட காலமாக எவ்வித புனரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இருந்தது. இந்நிலைமை இனங்காணப்பட்ட பின்னர் தான் மாகோ – ஓமந்தை இடையிலான புகையிரத மார்க்கத்தினை புனரமைக்கும் திட்டத்தினை ஆரம்பிக்க முடிந்தது. இத்திட்டத்தினை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்காக அனைவரும் எவ்வித பேதமுமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறும்’ அமைச்சர் அனைவரிடத்திலும் வேண்டிக் கொண்டார்.
இந்த புகையிரத மார்க்கத்தினை புனரமைப்பு செய்ததன் பின்னர் கொழும்பு தொடக்கம் காங்கேசன்துறை வரையான புகையிரத பயணத்திற்கு செலவாகும் நேரமானது ஒரு மணித்தியாலத்தினால் குறைவடையும் என்பதுடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் இப்பாதையினூடாக சரக்கு போக்குவரத்துக்கு அதிக வசதிகள் கிடைக்கும்.
கடந்த 05ம் திகதியிலிருந்து வடக்கு புகையிரத மார்க்கத்தின் புகையிரத போக்குவரத்து 05 மாத காலத்துக்கு அநுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பயணிகளின் நலன்கருதி இபோச மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் இணைந்து பயணிகள் ஏற்றிச் செல்வதற்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரும் இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்தனர்.
பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் சிரிபால கம்லத் அவர்கள், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உட்பட அரசியல்வாதிகள் மற்றும் புகையிரத நிறைவேற்றதிகாரி டபிள்யு.ஏ.டி.எஸ். குணசிங்க உட்பட புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
