இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 20-20 சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி 2-1 என வெற்றி பெற்றுள்ளது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சூர்யகுமார் யாதவ்வின் அதிரடியான சதம் மூலம் இந்தியா அணி 91 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலாவது போட்டி இரு அணிகளுக்குமிடையில் விறு விறுப்பாக நடைபெற்றது. அதில் இந்தியா அணி 02 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றது.
ஆரம்ப விக்கெட்டினை வேகமாக இழந்த போதும் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 49 ஓட்டங்களை ராகுல் திருப்பதி, சுப்மன் கில் ஆகியோர் இணைந்து பெற்று இந்தியா அணியினை மீட்டனர். திருப்பதி 35(16) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கில், சூர்யகுமார் யாதவ் இணைந்து தொடர்ந்து அதிரடி நிகழ்த்தினர். 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த வேளையில் சுப்மன் கில் 46(36) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்த இரண்டு விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்டன. ஆனாலும் சூர்யாவின் அதிரடி தொடர்ந்து. அக்ஷர் பட்டேல் இறுதி நேரத்தில் அதிரடி நிகழ்த்தி 21(09) ஓட்டங்களை ஆட்டமிழ்காமல் பெற்றார்.
சூர்யகுமார் யாதவ் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். 51 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்கமால் 112 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மைதானத்தின் நாற் திசையிலும் யாதவ் அதிரடியாக அடித்தாடினர். எப்படி இப்படி துடுப்பாடுகிறார் எனும் கேட்குமளவுக்கு அவரது துடுப்பாட்டம் அமைந்தது. அடித்த அடி எல்லாம் எல்லை கோடுகளை தொட்டன. பந்துவீச்சாளர்கள் மோசமாக பந்துவீசினார்கள் எனும் கூறுமளவுக்கு அமையவில்லை.
இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க 2 விக்கெட்களையும், கஸூன் ரஜித, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்டன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இன்றும் அதிரடி நிகழ்த்தி போட்டியினை விறு விறுப்பாக இலங்கை அணி மாற்றும் என எதிர்பார்த்த வேளையில் அது தலைகீழாக மாறிப் போனது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குஷல் மென்டிஸ் 23(15) ஓட்டங்களையும், தஸூன் சாணக்க 23(17) ஓட்டங்களையும் பெற்றனர். 16.4 ஓவர்களில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்றது.
இந்தியா அணியின் பந்துவீச்சில் ஆர்ஷிப் சிங் 3 விக்கெட்களையும், ஹார்டிக் பாண்ட்யா, உம்ரன் மலிக், யுஸ்வேந்த்ரா ஷஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
