பெந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹகல்ல, வடுமுல்ல பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுமிக்கு சிகிச்சை எனும் பெயரில் சித்திரவதை செய்த மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த பூசாரி மற்றும் குழந்தையின் பெற்றோர் பெந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு மாதங்களாக சித்திரவதைக்கு உள்ளான சிறுமியின் கவலைக்கிடமான நிலையைக் கண்ட சிறுமியின் பெரியப்பா ஒருவர் பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
இந்த சிறுமிக்கு நெஞ்சு அடைப்பு ஏற்பட்டதால் அதற்கு சிகிச்சை பெற இந்த பூசாரியின் உதவியை பெற்றோர் நாடியுள்ளனர். சிகிச்சைக்காக இரண்டு இலட்சம் பெற்றுக் கொண்ட பூசாரி, ஒருவார காலமாக அவரது ஆலயத்தில் வைத்து சிகிச்சை பெற்றுக்கொடுத்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வத்தேகமவில் உள்ள சிறுமியின் பாட்டியின் வீட்டுக்குச் அழைத்துச் சென்று சிறுமிக்கு இரண்டு மாதங்கள் கடுமையாக சிகிச்சை அளித்துள்ளனர்.
சிகிச்சை என்று கூறி, சிறுமியை அடித்தும், எரித்தும் காயப்படுத்தியுள்ளார். தெய்வங்களின் ஆலோசனைப்படியே தாம் இதை செய்வதாக கூறிய பூசாரி சிகிச்சைகளுக்கு அதிகளவில் பணம் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் வசிக்கும் இடத்தி அதிக சாமி சிலைகள் மற்றும் புத்தர் சிலையொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 33 வயதுடைய இவர் 5 பிள்ளைகளின் தந்தை என்பதுடன் ராணுவ சேவையிலிந்து ஓய்வு பெற்றவர் என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸ் நிலைய பரிசோதகார்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.