கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அதிக விலைக்கு முட்டை விற்ற பல இடங்கள் இன்று (22.01) சோதனையிடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் சாதாரண கடைகளுக்கு 1 இலட்சம் ருபாய் முதல் 5 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும், நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்ட கடைகளுக்குச் 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி, முட்டை விலை உயர்வைக் கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார அதிகாரசபை புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை கடந்த 20ம் திகதி வெளியிட்டது. இதில் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, கொழும்பை சூழவுள்ள கொட்டாவ பின்ஹேன உள்ளிட்ட சில பிரதேசங்களில் மாத்திரமே முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகள் உட்பட நாடளாவிய ரீதியில் பல இடங்களில் உள்ள கடைகளுக்கு மொத்த வியாபாரிகள் முட்டைகளை வழங்கவில்லை எனவும், கடைகளில் இன்று முட்டை விற்பனை செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

