கொழும்பு மாநகர சபையின் முன்னால் முதல்வர்களில் ஒருவராக 1953-1954ஆண்டு காலப்பகுதியில் கடமையாற்றிய தில்லைநாதன் ருத்ரா அவர்களது திருவுருவப்படம் இன்றைய தினம் கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனாநாயக்கவினால் திரை நீக்கம் செய்யப்பட்டது.
முன்னால் முதல்வர் ருத்ரா அவர்களின் மகன்கள் வைத்தியர் பிரகாஸ் ருத்ரா, ஜெயா ருத்ரா மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்ட இவ் நிகழ்வு கொழும்பு மாநகர சபை தலைமைக்கட்டத் தொகுதியில் சபை மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதி முதல்வர் இக்பால், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ரைரஸ் பெரேரா, வெள்ளவத்தை தொகுதி மாநகர சபை உறுப்பினர் கனகரஞ்சிதன் பிரணவன் ஆகியோரோடு மாநகர ஆணையாளர் பத்திராணி ஜெயவர்த்தன மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கொழும்பு மாநகர சபைக்காக 1946 இல் வெள்ளவத்தை வட்டாரத்தில் இருந்து கொழும்பு மாநகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லைநாதன் ருத்ரா-Jp, கொழும்பு மாநகர சபையின் 10வது கொழும்பு மேயராக 21 செப்டம்பர் 1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 13 ஆகஸ்ட் 1954 வரை கொழும்பு மேயராக பணியாற்றியிருந்தார்.
தில்லைநாதன் ருத்ரா, யாழ்ப்பணம் வட்டுக்கோட்டையில் 1909ஆம் ஆண்டு பிறந்தார்.சிறு வயது முதல் வெள்ளவத்தையில் வளர்ந்த அவர் சிறந்த பளு தூக்கும் வீரராகவும், குத்துச்சண்டை வீரராகவும் திகழ்ந்த அவர் “கொழும்பின் வலிமையான மனிதர்” என்ற பட்டத்தைப் பெற்றார்.1960ஆம் ஆண்டு அமரத்துவம் அடைந்த அவர் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளில் பெயர் குறிப்பிடும் அளவுக்கு பிரபலமான ஒருவராவர். அதற்கு சான்று பகிர்வதாக வெள்ளவத்தை ருத்ரா மைதானம், மற்றும் ருத்ரா மாவத்தை என்பன அவரது பெயர் சூட்டப்பட்டு இன்று மக்கள் பாவனையில் இருப்பது சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.