2023ம் ஆண்டுக்கான பாடசாலை கல்வியாண்டை ஆரம்பிக்க தீர்மானித்திருக்கும் மார்ச் 27ம் திகதிக்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய பாடப்புத்தகங்களின் விநியோகத்தை நிறைவு செய்வதற்கு கல்வி அமைச்சு தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023ம் கல்வியாண்டுக்கு தேவையான பாடநூல்களை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று ஹோமாகமவில் உள்ள கல்வி வெளியீட்டு திணைக்கள களஞ்சிய வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர், ஆரம்ப வகுப்புகள் முதல் மற்றும் தரம் 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கு அத்தியாவசியப் புத்தகங்கள் அனைத்தும் வழங்க தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியக் கடன் உதவியின் கீழ் புத்தகங்களுக்கான மூலபொருட்கள் பெறப்பட்டதுடன், அச்சிடுவதற்கு உதவிய அரச மற்றும் ஆரம்ப முற்பணத்துடன் பாடப்புத்தகங்களை அச்சிட முன்வந்த இலங்கையில் உள்ள அனைத்து தனியார் அச்சக நிறுவனங்களுக்கும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
நகரப் பகுதிகளுக்கும், தலைநகரைச் சுற்றியுள்ள பாடசாலைகளுக்கும் மட்டுமே பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரசு உதவிபெறும் பாடசாலை மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்களை விரைவில் விநியோகிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும், பொருளாதார சவால்களை சமாளித்து எதிர்கொள்ளும் இந்த காலத்தில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கல்வி அமைச்சகர் கேட்டுக்கொண்டுள்ளார்.