2022ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (08.03) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் தொழில்சார் நடவடிக்கைகளே தாமதத்திற்கு காரணம் எனவும் விடைத்தாள்கள் பரீட்சை செய்வதில் ஏற்பட்டுள்ள இடையூறுகளே பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடருமானால் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர்தர விடைத்தாள் பரீட்சைக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும், தற்போது மீண்டும் இந்த கொடுப்பனவை அதிகரித்து தருமாறு ஆசிரிய சங்கங்கள் கோரிக்கை விடுப்பது எந்த விதத்தில் நியாயம் என தமக்கு விளங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.