சனநெரிசல் மிக்க பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டால் பாரிய பாதிப்பினை சந்திக்க நேரிடும்!

கொழும்பிற்கு மேற்கே ஆழமான கடற்பரப்பில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தை பாதிக்கும் நிலநடுக்கங்களுக்கும் இந்த விரிசல்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேருவளை பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு நில அதிர்வுகளுக்கான பிரதான காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டியது காலத்தின் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பை சுற்றி நில அதிர்வு அளவிகளை (கருவிகளை) பொருத்தி அதன் மூலம் பெறப்படும் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நில அதிர்வுக்கான முக்கிய காரணங்களை கண்டறிய முடியும் என்றும் பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார்.

1615 ஆம் ஆண்டு முதல் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருவதாகவும், ஆனால் அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கொழும்பின் மேற்குப் பகுதியில் நில அதிர்வுகள் ஏற்படக் கூடும் எனவும், அதிக சனத்தொகை செறிந்து வாழும் கொழும்பை அண்மித்த பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பாரியளவில் இருக்கலாம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் பதற்றப்படாமல் அதிக அக்கறை செலுத்தி உடனடியாக அவதானிக்க வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply