பெங்களூரை உருட்டி எடுத்த கொல்கத்தா

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (06.04) IPL இன் ஒன்பதாவது போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்றது. கொல்கத்தா அணியின் அதிரடியான துடுப்பாட்டம், அபாரமான பந்துவீச்சு மூலம் இந்த வெற்றியினை பெற்றுக்கொண்டது. ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதற் போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் இந்த போட்டியில் மோசமான தோல்வியினை சந்தித்துள்ளனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பம் முதல் ஒரு பக்கமாக தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்த போதும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் ஒரு பக்கமாக விக்கெட்டை தாக்கு பிடித்து அதிரடி ஆரம்பம் ஒன்றை வழங்கினார். 57(44) ஓட்டங்களை அவர் பெற்றுக் கொண்டார். மத்திய வரிசையில் ரிங்கு சிங், குர்பாஸ் மற்றும் ஷர்தூள் தாகூர் ஆகியோரோடு இணைப்பாட்டம் ஏற்படுத்தி 46(33) ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இறுதி நேரத்தில் அதிரடி நிகழ்த்திய ஷர்தூள் தாகூர் 29 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். தாகூர், ரிங்கு சிங் ஆகியோர் 103 ஓட்டங்களை ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் கர்ண் ஷர்மா, டேவிட் வில்லி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்த ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 123 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஆரம்ப இணைப்பாட்டம் அதிரடியாகவே அமைந்தது. பப் டு பிளேஸிஸ், விராத் கோலி ஆகியோர் 44 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிந்தனர். பிளேஸிஸ் 23 ஓட்டங்களையும், விராத் கோலி 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 15 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்களை கைப்பற்றினார். சுயாஷ் ஷர்மா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்தா அணி தமது முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது. பெங்களூர் அணி முதற் போட்டியில் வெற்றி பெற்றுள்ள போதும், இந்தப் போட்டியில் அடைந்த மோசமான தோல்வி ஏழாவது இடத்துக்கு பின் தள்ளியுள்ளது.

பெங்களூரை உருட்டி எடுத்த கொல்கத்தா

Social Share

Leave a Reply