இனப்பெருக்கத்துக்காகவே குரங்குகள் சீனாவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். விலங்குகள் இனப்பெருக்க சீன நிறுவனமொன்றுக்கே இந்த குரங்குள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மேலும் அவர் கூறியுள்ளார்.
அந்த நிறுவனம் 100,000 குரங்குகளை வேண்டுமென கோரிக்கை முன் வைத்திருந்ததாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் இலங்கையில் உள்ள சீன தூதரகம் சீனா நிறுவனம் எதுவும் அவ்வாறான கோரிக்கையினை முன் வைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலா துறை நிறுவனங்கள், சமய தலைவர்கள், விஞ்ஞானிகள் என சகலரது கருத்துக்களையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறந்த, ஏற்றுக்கொள்ளக்கூடிய நடு நிலையான யோசனைகள் கருத்தில் எடுக்கப்பட்டு அதன் படி குரங்கு ஏற்றுமதி செய்யப்படுமென அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
காடுகளிலுள்ள குரங்குள் எடுக்கப்படமாட்டாது எனவும், விவசாயத்துக்கு பாதிப்பு வழங்கும் குரங்குகளே சேகரிக்கப்பட்டு இவ்வாறு அனுப்பப்படவுள்ளதாக குணதாச சமரசிங்க கூறியுள்ளார்.
அமைச்சு இவ்வாறு கூறியுள்ள போதும் குரங்குகள் உயிரோடு இருக்கும் போதே அவற்றின் மூளையினை
உண்ணும் நோக்கத்துக்காகவே குரங்குகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சுற்றுச் சூழல் ஆர்வலர் நயனாக ரன்வெல்ல கூறியுள்ளார். தங்கள் விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உணவு தயாரிப்பு முறையொன்று சீனாவில் முன்னெடுக்கபட்ட்டு வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்தும் இது போன்ற பெரியளவிலான குரங்குகள் சீனாவுக்கு கொண்டுவரப்படவுள்ளன. அவை மனித உடலமைப்பை ஒத்தவை. அவை ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார்.
விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது எனவும், அதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறியுள்ள நயனாக ரன்வெல்ல இதன் மூலம் இலங்கைக்கு வெளிநாட்டு வருமானம் எதுவும் கிடைக்காது எனவும் கூறியுள்ளார்.
