யெமன் தலைநகர் சனாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி சுமார் 78 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், கூட்டத்தில் இருந்த ஒருவர் மின்கம்பி ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட வெடிப்பில் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு நபருக்கு தலா 9 டொலர் உதவி தொகையை பகிரும் இந்நிகழ்வில் பங்குகொள்ள நூற்றுக்கணக்கான மக்கள் பாடசாலைக்கு வந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உதவி தொகை விநியோகத்தை ஏற்பாடு செய்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 13 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.