இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் உருவாகி வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட கலவரம், தீவைப்பு, அரச வங்குரோத்து நிலைமை போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை 8 மாதங்களில் மாற்றியமைத்து வெற்றிகரமாக மாற்ற முடிந்ததாகவும், அது ‘Srillnka comeback story ’ என அழைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை இன்று (26.04) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் 16 தடவைகள் உடன்படிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அந்த உடன்படிக்கைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையால் தோல்வியடைந்ததை ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்வதை தவிர வேறு மாற்றுவழி நாட்டில் இருக்கவில்லையென்பதால் தற்போதைய பலவீனங்களை ஒதுக்கி புதிய திட்டத்தில் 17ஆவது தடவையாக இணைய வேண்டியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தேசிய கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் பாதுகாப்பிற்கான சமூக பாதுகாப்பு வலையமைப்பை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியின் முழுமையான உரை,
பொருளாதாரம்,நிதி நெருக்கடி மற்றும் ஜ.எம்.எவ். குறித்து ஊடகங்களிலும், வேறு பல இடங்களிலும் கேள்வியெழுப்பப்பட்டிருந்தன. 2022 ஜூலை மாதத்தில் இருந்த கலவரம் , தீ வைப்பு, அரசாங்கத்தின் வங்குரோத்து நிலை இவற்றினால் இலங்கை மீதிருந்த நம்பிக்கை முழுமையாக இல்லாமல்போனது. தற்போது எட்டு மாதங்களின் பின்னர் எமது பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளதன் மூலம் இலங்கை சிறப்பான வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்று Srillnka comeback story ’ என்று கூறப்படுகிறது. வீழ்ந்திருந்த இலங்கை மீண்டும் சரியான பாதைக்கு வந்து மீண்டெழுந்துவருகிறது. இதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முழு நாட்டினதும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.
அக்காலத்தில் இந்த நிலை குறித்து நான் மீண்டும் சுருக்கமாக குறிப்பிடுகிறேன். இதனை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். விசேடமாக 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எமது வரிகள் குறைக்கப்பட்டதன் மூலம் மொத்த தேசிய உற்பத்தியில் 4 வீதத்தை இழக்க நேரிட்டது. அதன் பின்னர் கோவிட் பெருந்தொற்று காரணமாக எமது பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்குள் வீழ்ந்தது. இதன்பலனாக அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபாவின் பெறுமதி 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மூன்று மாதங்களில் 40 வீதத்தனால் வீழ்ச்சியடைந்தது. இதன்பின்னர் ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி கண்டது. 2022ஆம் ஆண்டு முழுவதும் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதத்தினால் குறைந்தது. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்தில் பணவீக்கம் 70 வீதமாக அதிகரித்திருந்தது. உணவுக்கான பணவீக்கம் 95 வீதமாக இருந்தது.
இவ்வாறான நிலையில் ஜூலை மாதத்தில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். மக்கள் பெரும் கஷ்டத்தில் இருந்த சந்தர்ப்பத்தில், நம்பிக்கை இல்லாமல் இருந்த சந்தர்ப்பத்தில், நாட்டை மீண்டும் மீண்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இல்லையெனில் நாடு முழுமையாக அழிவுப்பாதைக்குச் சென்றிருக்கும். எனது வீட்டு நூலகத்தில் இருந்த புத்தகங்களும், ஓவியங்களும் எரிக்கப்பட்டாலும் நான் இந்தப் பணியில் இருந்து பின்வாங்கவில்லை. நாடு அழிவுப் பாதைக்குச் செல்லாமல் தடுத்து நாட்டை மீண்டெடுக்க நாம் பணியாற்றினோம்.
அக்காலத்தில் இலங்கையின் முழுமையான கடன் 83.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இதில் வெளிநாட்டுக் கடன் 43.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தேசிய கடன் 42.பில்லியன் அமெரிக்க டொலர். மொத்தக் கடன் 83.6 பில்லியனாகும். இதுவரை செலுத்த வேண்டிய மொத்தக் கடன், மொத்த தேசிய உற்பத்தியில் 128 வீதமாக இருந்தது. இருதரப்பு, தனிப்பட்ட கடனை மீளச் செலுத்தாததால் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மீளச் செலுத்தாத கடன் நிலுவையாக 2.7 பில்லியன் அமெரிக்க டொலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடி ஏற்பட்டதால் 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கைக்கு, வெளிநாடுகளில் இருந்து பொருட்களையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. 2022 மே மாதத்தில் வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டியை கூட செலுத்த முடியாமல் போனது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இந்த நிலை எமக்கு ஏற்பட்டது.
அரசாங்கத்தை அன்று பொறுப்பேற்ற பின்னர் ஐ.எம்.எவ், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தேன். செப்டம்பர் மாதம் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான இணக்கப்பாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் வந்திருந்தோம். இந்த இணக்கப்பாடு குறித்து சில விடயங்களைக் குறிப்பிட வேண்டும். நீடிக்கப்பட்ட கடன் வழங்குவதற்கான இணக்கப்பாட்டில் ஆறு பிரதான மறுசீரமைப்பு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அ. அரசாங்கத்தின் நிதி வருமானத்தை ஒருங்கிணைத்தல்!.
இதற்கமைய அரச நிதி மூலத்திற்குத் தேவையான நிறுவன மறுசீரமைப்பு, சமூக பாதுகாப்பு வலையமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதும் அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்பது ஆகிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆ. அரச கடன்களை மறுசீரமைப்பது!
- நிதி உறுதிப்பாட்டை பேணுதல், வெளிநாட்டு ஒதுக்கீடுகளை கட்டியெழுப்புவது,நிதித்துறையில் உறுதிப்பாட்டை பேணும் வகையில் கொள்கைகளை மீளமைப்பது
- வெளிநாட்டு அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது.!
- ஊழலை ஒழிப்பதற்கு கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை முன்னெடுப்பது
இதற்கான சட்டமூலத்தை அமைச்சர் நாளை சபையில் சமர்ப்பிப்பார் . - பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
இதற்கமையவே, வெளிநாட்டு கடன் வழங்குனர்களின் நிதி உறுதிப்பாட்டுக்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டோம். இந்தப் பணிகளை செய்துமுடிந்ததால், எமக்கான நிதி காப்புறுதிக்கான சான்றிதழ் கிடைத்தது. இவற்றை வழங்கிய பரிஸ் கிளப் மற்றும் இந்திய பொதுவாக பணியாற்றியிருந்தன. இந்தியா ஆரம்பத்தில் சாதகமான பதிலை வழங்கியது. இதற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சீனாவுடன் தனியாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம். இதற்கமைய பரிஸ் கிளப், இந்தியாவுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். மறுபுறம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். இதன்பின்னர் தனியாருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது. இந்த இணக்கப்பாட்டினால் 3 பில்லியன் டொலர்கள் அடுத்த நான்கு வருடங்களில் எமக்கு கிடைக்கும். இதனைத்தவிர ஏனைய நிறுவனங்களையும் பார்த்தால் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பெற்றுக்கொள்ள முடியும். இந்த நிதி எமக்குத் தேவைப்படுகிறது. அதேபோல், பலன்களை தற்போது பார்க்க முடிகிறது. வெளிநாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் நம்பிக்கையை நாம் வென்றுள்ளோம். தற்போது பொருளாதார நிலைத்தன்மை ஏற்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் இலங்கை மீது கவனம் செலுத்துகின்றனர்.
16 தடவை ஐ.எம்.எவ். இணக்கப்பாட்டிற்கு வந்து, நாம் முழுமையாக செயற்படவில்லை. எனவே, 17ஆவது தடவையில் நிலைபெறு நிலையை அடையும் போது, எமது நீண்டகால பலவீனங்களை இல்லாமல் செய்து, புதிய வேலைத் திட்டத்திற்கு செல்லவேண்டியுள்ளது.
இதில் பல விடயங்கள் இருக்கின்றன. கடனை மறுசீரமைப்பு குறித்து நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் இதில் முக்கியமானவை. இருதரப்பு கடன் வழங்குனர்களைப் போல தனியார் கடன் வழங்குனர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். இந்தக் கடன்களை மறுசீரமைக்க வேண்டியுள்ளது. கடன்களை மறுசீரமைக்கவில்லையெனில், எமக்கு பணப் புழக்கம் இல்லாமல் இருக்கும். டொலர்களும், ரூபாவும் இல்லாமல் இருந்தால் அரசாங்கத்தினால் முன்நோக்கி செயல்பட முடியாது. இவ்வாறான நிலையில், சேவைகளுக்காக நிதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதனால், வெளிநாட்டு கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது. தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறியுள்ளனர். எனினும், இதுகுறித்து இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சரும், மத்திய வங்கி ஆளுநரும் தெரிவித்தார்கள். எனினும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தும்போது தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டும். நாம் நிபந்தனைகளை விதித்து பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியாது. அப்படிச் செய்தால், அவர்களும் நிபந்தனைகளை முன்வைத்து எம்முடன் பேச வர முனைவார்கள். இதனைவிட நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைக்குச் செல்வது பலன்தரும்.
இதனை செய்யும் அனைத்துத் துறைகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. சில வங்கிகள் இதனை எதிர்கொள்ள முடியாது என்று கூறுகின்றன. அப்படியாயின், இந்தப் பொருளாதாரத்தை பொறுப்பேற்று முன்னெடுத்துச் செல்லுமாறு அவர்களுக்குக் கூறுகிறேன்.
பங்குச் சந்தை சரிவைச் சந்திக்கும் என்றும் கூறுகின்றனர்.பல்வேறு நிபந்தனைகளை முன்வைக்க முடியாது. நாம் இதனை பாராளுமன்றத்தில் தீர்மானித்து, என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிவிக்கிறோம். ஊழியர் சேமஇலாப நிதி குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். இதில் உள்ள அங்கத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட நாம் இடமளிக்கமாட்டோம் என்பதை நான் கூற முடியும். நாம் தான் அதனை ஆரம்பித்தோம்.
வறியோருக்கான வேலைத் திட்டத்தை நாம் முன்னெடுத்துள்ளோம். உலக வங்கி இதற்கான நிதியை வழங்கியுள்ளது. விசேடமாக இவர்கள் குறித்து கவனம் செலுத்துமாறு உலக வங்கி கூறுகிறது. பொருத்தமானவர்களுக்கு கொடுங்கள். எனினும், தகுதியற்றவர்களை நீக்க வேண்டும். இதனை நாம் செய்ய வேண்டும்.புதிய பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன், குறைந்த வருமானம் பெறுவோரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதனால், இந்தப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். பரிஸ் கிளப் மற்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தைகளை ஒரே மேடையில் ஆரம்பிக்க வேண்டும். சீனாவுடன் தனியாக இதனை நடத்த வேண்டும். இதுகுறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு குறிப்பிடுகிறேன். இவற்றை மறைப்பதற்கான தேவை இல்லை. பல கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது.
நாம் 6 அல்லது 7 சத வீத பொருளாதார வளர்ச்சி வீதத்தை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கு இந்த சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 7 சத வீதத்தை 8 சத வீதமாக உயர்த்தவும் எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்காகத் தான் நாம் இந்த மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம். சில சட்டங்களை நீக்க வேண்டும். ஏன் சில அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துகிறோம் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. தனியாருக்கு வழங்கினால் இதனை விட சிறப்பாக செயற்படுத்த முடியும் அவற்றை தனியாருக்கு வழங்குவோம்.
ஒவ்வொரு அமைச்சுகளும் தமக்குத் தேவையானவாறு 25-30 வருடங்களாக பல்வேறு வரையறைகளை விதித்துள்ளனர். தற்பொழுது பொருளாதார கண்ணோட்டத்தில் வரையறைகளில் எவற்றை நீக்க வேண்டும் எதனை வைத்திருக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். பசுமைப் பொருளாதாரமும் எமக்கு அவசியமாகிறது. டிஜிடல் பொருளாதாரமும் எமக்கு அவசியமாகிறது. இவற்றை உருவாக்குவது தான் எமது நோக்கமாகும். அவற்றுக்கான பல முன்னெடுப்புகள் இருக்கின்றன.விவசாயத்தை நவீனமயப்படுத்த வேண்டும். புதிய கைத்தொழில்களை கொண்டுவர வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தவிர எமக்கு வேறு எந்த மாற்றுவழியும் இல்லை. மாற்றுவழிகள் எதுவும் முன்மொழியப்படவும் இல்லை. வேறு மாற்றுவழி இல்லாவிட்டால் இதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இதனை அங்கீகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன். ஜ.எம்.எவ். 6 மாதத்திற்கு ஒரு தடவையே எமது நாட்டுக்கு வருகிறது. குறைபாடுகள் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கலாம்.
தேசிய பேரவை போன்று பல குழுக்கள் உள்ளன. முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்ற வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும். இது தொடர்பில் பல கருத்துகள் இருக்கலாம். அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். அனைவரும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
2048 ஆம் ஆண்டாகும் போது நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இன்றேல் நாம் இளைஞர்களை காட்டிக் கொடுத்தவர்களாக ஆகியிருப்போம்.அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கியதாக ஆகிவிடும் இளைஞர்கள் குறித்து சிந்திக்க வேண்டும். அதிகார மையம் பற்றி மாத்திரம் சிந்திக்கக் கூடாது. இதனை நாம் முன்னெடுக்கத் தவறினால் ஓரிரு ஆண்டுகளில் எங்கள் எவருக்கும் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே அனைவரும் இணைய வேண்டும். 2048 ஆம் ஆண்டு வரையான கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் 5 வருடங்களுக்கான திட்டத்தை செயற்படுத்த ஒத்துழைப்ப வழங்க வேண்டும்.