நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்!

இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய காலநிலையில் காரணமாக டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாகவும், இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் 29,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு மாத காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் தற்போது சுமார் 140 வகையான நுளம்புகள் இருப்பதாகவும், அவற்றில் ஏடிஸ் ஏஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகிய இரண்டு வகை நுளம்புகளே அதிகமாக டெங்கு தொற்றை பரப்புவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு பரவும் டெங்கு வைரஸின் 4 குழுக்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவை டெங்கு 1 (DEN 1), டெங்கு 2 (DEN 2), டெங்கு 3 (DEN 3) மற்றும் டெங்கு 4 (DEN 4) என்றும் அழைக்கப்படுகிறது. அத்துடன், சுமார் 12 வருடங்களின் பின்னர் இந்த நாட்டில் மூன்று வகையான டெங்கு வைரஸ் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவருக்கு இரண்டு நாட்கள் காய்ச்சல் இருந்தால் டெங்கு பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் என சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் தங்கள் சுற்றுச் சூழல் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அலட்சியப்படுத்தினால் ஆபத்தை தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply