பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகருமான நடிகர் மனோபாலா இன்று (03.05) இவ்வுலகை விட்டு பிரிந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் முதல் கலீரலில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தனது 69வது வயதில் சென்னையில் இறைபதம் அடைந்துள்ளார்.
இவர் இறுதியாக தமிழில், ‘கொன்றால் பாவம்’ மற்றும் ‘GHOSTY’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பழம்பெரும் திரைப்படத் இயக்குநரான பாரதிராஜாவிடம் உதவியாளராகத் தொடங்கியது மனோபாலாவின் திரைப்பயணம். 1982ஆம் ஆண்டு வெளிவந்த ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய இவர், பிள்ளை நிலா, ஊர்க்காவலன் மற்றும் மல்லு வெட்டி மைனர் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
2000 களின் முற்பகுதியில் அவர் நகைச்சுவை நடிகராக தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார், இதில் பிதாமகன், ஐஸ், சந்திரமுகி, யாரடி நீ மோகினி, தமிழ்ப் படம், அலெக்ஸ் பாண்டியன், அரண்மனை மற்றும் ஆம்பள போன்ற படங்களில் அவர் மறக்கமுடியாத நகைச்சுவை பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்.