யாழில் விகாரை பகுதியில் போராட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற நால்வர் காங்கேசன்துறை பொலிஸாரால் இன்று (04.05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களே இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நேற்று(03.05) மாலை முதல் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று இரவு முதல் போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் குறித்த பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் நுழையமுடியாதவாறு பொலிஸாரின் வாகனங்கள் வீதிக்கு குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட அங்கிருந்த சிலருக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன், விகாரையை சுற்றியுள்ள காணிகளையாவது விடுவிக்குமாறு கோரியும், அதற்கும் அவர்கள் பதில் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த விகாரைக்கான கட்டுமானப்பணிகள் தற்போது முழுமைப்படுத்தப்பட்டு கலசம் வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply