களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய பிரதான சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த களுத்துறை நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், 19 வயது இளம்பெண் உட்பட 3 பேரை கைது செய்திருந்ததுடன், தப்பிச்சென்றிருந்த பிரதான சந்தேகநபரும் நேற்று (09.05) காலை ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.
களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தைச் சேர்ந்த தனுஷ்க கயான் சஹபந்து என்ற சந்தேக நபர் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள நண்பரின் வீட்டில் தலைமறைவாகி இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபர் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அதுவரை தலைமறைவாகி இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இருமுறை திருமணமானவர் என்பதும், அவர் முந்தைய திருமணத்தில் இருக்கும் போதே மீண்டும் புதிய திருமணம் செய்து கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
பிரதான சந்தேக நபர் உயிரிழந்த சிறுமியை சம்பவத்திற்கு முன்னர் ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவி டிக் டோக் காணொளி மூலம் அறிமுகமானதாகவும், முதலில் அவளுடன் தொடர்பை பேணியதாகவும் பின்னர் அவளது நண்பர்களுடன் பழகியதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஹோட்டலில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்திருந்த போதிலும், அவர்கள் ஒரு அறையில் மது அருந்தியதாக ஹோட்டல் பணியாளர் தெரிவித்துள்ளார்.
இவர்களுடன் பயணித்த இளம் தம்பதிகள் சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வருவோம் என்று பிரதான சந்தேக நபருக்குத் தெரிவித்து ஹோட்டலை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
சிறுமியுடன் தனது சொந்த அறைக்குச் சென்ற பிரதான சந்தேக நபர் சுமார் 20 நிமிடங்களில் வெளியே வந்து, ஹோட்டலில் இருந்து வெளியேறிய நபருக்கு அழைப்பை ஏற்படுத்தி, மாணவி தனது ஆடைகளை களைந்து ஜன்னல் வழியாக குதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பிரதான சந்தேக நபர், உயிரிழந்த சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ளவில்லை என தெரிவித்துள்ளதுடன், மரண பரிசோதனைகளிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹோட்டல் அறையில் இருந்த போது மாணவி ஓர் அழைப்பு வந்ததாகவும் அந்த அழைப்பில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாகவும், பின்னர் கதிரையில் மேல் ஏறி ஜன்னல் வழியே வெளிய குதித்தாகவும் பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, உயிரிழந்த மாணவியின் கைத்தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் அவரது தொலைபேசி காணாமல் போயுள்ளதுடன், மாணவியின் மரணத்தின் பின்னர் பிரதான சந்தேகநபரும், உயிரிழந்த மாணவியின் நம்பியும் அவளது காதலனும், மாணவியின் தொலைபேசியை புகையிரத பாதைக்கு குறுக்கே உள்ள ஏரியை நோக்கி வீசியதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.