தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு தொற்று!

தற்போதைய டெங்குப் பரவல் இவ்வாறே தொடர்ந்தால் எதிர்வரும் இரண்டு மாதங்கள் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது என நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த கால தரவுகளின்படி, 2022 மே மாத இறுதி வரை இலங்கையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,206 ஆக பதிவாகியிருந்தது.

எனினும், இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் மே மாதம் 9ம் திகதி அதாவது நேற்று முன்தினம் காலை வரையில் 31,993 டெங்கு நோயாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணதிலிருந்தே அதிக டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை 15,746 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மத்திய மாகாணத்தில் இதுவரை 2401 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தெற்கிலும் வடக்கிலும் கணிசமான அளவில் டெங்கு பரவுவதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 18 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து மாகாண பிரதம செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரையை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்துமூலம் அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் முறையான பொறிமுறையை புதுப்பிக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Social Share

Leave a Reply