ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானுக்கும், ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூருக்கும் சென்றுள்ளததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் அந்நாட்டின் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்த தீர்மானித்துள்ளார்.
சிங்கப்பூர் விஜயத்தின் பின்னர் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி, மே 24ம் திகதி முதல் 27ம் திகதி வரை ஜப்பானில் தங்கியிருப்பார் என தெரியவந்துள்ளது.
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் புமியோ கிஷிடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அங்கு ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய அணுகுமுறைகள் மூலம் வலுப்படுத்துவது குறித்தும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளன.
இந்த விஜயத்தின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் டாரோ கோனோ ஆகியோருடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், டோக்கியோவில் நடைபெறும் ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28வது சர்வதேச மாநாட்டிலும் உரையாற்றஉள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அரசியல், பொருளாதார மற்றும் பிராந்திய பிரச்சினைகள் மற்றும் உலகில் ஆசியாவின் பங்கு குறித்து பிராந்திய தலைவர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு முக்கிய சர்வதேச மாநாட்டாக இந்த மாநாடு கருதப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு கவுன்சில், ஜப்பான்-இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் ஜப்பான்-இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம் ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் திரு.ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி இது அவரது இரண்டாவது ஜப்பான் விஜயமாகும்.