லோரன்ஸின் மறைவு மலையக மக்களுக்கு பெரும் இழப்பு – சுப்பையா ஆனந்தகுமார்!

மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் அ.லோரன்ஸ் அவர்களின் மறைவு உண்மையில் பெரும் வேதனையளிக்கிறது. மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிக்கொள்வதில் இளைஞர்காலம் முதல் பல்வேறு முயற்சிகளை எடுத்தவர். அவரின் இழப்பு எமது சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும் என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அ.லோரன்ஸ், ஒரு சிறந்த தொழிற்சங்கவாதியும் அரசியல் செயல்பாட்டாளருமாவார். இளைஞர் காலம் முதல் பல்வேறு மாணவர் அமைப்புகள், பல்கலைக்கழக அமைப்புகள் உட்பட அரசியல் கட்சிகளில் பங்குபற்றி தமது ஆளுமையை வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்த காலத்தில் அரசியலமைப்பு சீர்த்திருத்தங்களுக்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் மலையக மக்களுக்கான அரசியல் தீர்வுகள் தொடர்பில் தமது முன்மொழிவுகளை வழங்கியிருந்தார்.

அதேபோன்று மலையக மக்கள் முன்னணியில் நீண்டகாலமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், அக்கட்சியில் பல்வேறு பதவிகளையும் வகித்திருந்தார்.

பாராளுமன்றத்தில் அவரது குரல் ஒலிக்காத போதிலும் மக்களுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றிய ஒருவராக உள்ளார். அன்னாரை இழந்து சோகத்தில் தவிக்கும் அவரது குடும்பத்துடன் எனது துயரை பகிர்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் சுப்பையா ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply