நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்!

கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த 6 மாதங்களில் நாடளாவிய ரீதியில் 34 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவிக்கையில், கடந்த வருடம் மாத்திரம் 60 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றுள் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் மற்றும் இதர வகை துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் உள்ளடங்குவதாகவும், 2022ம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 559 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 493 கொலை சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2023 முதல் தற்போது வரை, 255 கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களில் இடம்பெற்ற 34 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும், தனிப்பட்ட தகராறுகள் மற்றும் சாதாரண காதல் உறவுகள் காரணமாகவும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு முதல் பதிவாகியுள்ள 255 கொலைகளில் 223 கொலைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், துப்பாக்கிகள், அவர்களின் வாகனங்கள் மற்றும் துணை நின்றவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் கொலைச் சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்படவில்லை எனவும், கடந்த வருடத்தில் காணப்பட்ட அதே நிலையே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply