சாரா ஹல்டனின் சேவைகளை பாராட்டி பிரதமர் வாழ்த்து!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சார ஹல்டன் பதவி விலகவுள்ளார். இந்நிலையில், அவருடைய சேவைகளை பாராட்டி பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை நேற்று (19.06) அலரிமாளிகையில் சந்தித்த சார ஹல்டன் அவருக்கு பிரியாவிடை வழங்கினார். இதன்போதே பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை மற்றும் இங்கிலாந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட அயராத முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று பிரதமர் கூறியுள்ளார்.

தினேஷ் குணவர்த்தன வெளிவிவகார அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும் பதவி வகித்த காலத்திலும், தற்போது பிரதமராக பதவி வகிக்கின்ற காலத்திலும் சாரா ஹல்டன் வழங்கிய ஆதரவு தமது பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்கு பக்கபலமாக அமைந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முடிவு மற்றும் ஐ.எம்.எஃபின் நிதி உதவி கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இங்கிலாந்து, இலங்கையில் புதிய முதலீட்டு திட்டங்களை ஆரம்பிக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உயர் ஸ்தானிகர் ஹல்டனின் எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் கலந்துகொண்டார் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply