ஹம்பாந்தோட்டை செட்டிகுளம பிரதேசத்தில் மொஹமட் சஹாரன் நடத்திய தீவிரவாத விரிவுரை மற்றும் ஆயுதப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டதாக கூறப்படும் இளைஞனை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆயத்தமாக ஹம்பாந்தோட்டை செட்டிகுளம பகுதியில் 2018 ஜூலை 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் குறித்த விரிவுரை இடம்பெற்றதாகவும், அங்கு தீவிரவாத விரிவுரைகள் மற்றும் பயிற்சி பெறாதோர் உள்ளிட்ட அனைவர்க்கும் பயிற்சி முகாம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் கணனி பாடநெறியில் கல்வி பயின்று வந்த 23 வயதுடைய கம்பளை வெலம்படை பகுதியைச் சேர்ந்த அஜ்மல் சாஹீர் என்ற இளைஞன் இந்த முகாமில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர் என எனத் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேகநபர் குறித்த தீவிரவாத பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டமை தொலைபேசி தரவு பதிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.