இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் குற்றவாளிகளை விசாரித்து அவர்களுக்கு தண்டனைகளை வழங்குவதற்கு பயங்கரவாத தடைச் சடத்திற்கு பதிலாக உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையை பயன்படுத்துமாறு ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் நேற்று (21.06) இடம்பெற்றது. இதன்போது வாய்மூல அறிக்கையை ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல்-நஷிப், வாசித்தார்.
குறித்த அறிக்கையில், பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியால் கடந்த காலத்தில், ஏற்பட்ட போராட்டங்கள் மூலம் மக்கள் முன்வைத்த கருத்துக்களை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ள விடயங்கள், தமிழ் அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை, காணி விடுவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பு சபையின் புதிய நியமனங்கள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த அவர், கடந்த காலங்களில் இலங்கை பல தற்காலிக ஆணைக்குழுக்களைக் அமைத்ததையும், அவ் ஆணைக்குழுக்கள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த தவறிவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்த கூட்டத்தொடரின்போது கனடா, மலாவி, மொன்டனீக்ரோ, வடக்கு மெசிடோனியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கூட்டாக இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.