‘மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவோருக்கு சலுகை வேண்டும்’ – மக்கள் கோரிக்கை!

முப்பது (30) அலகுகளுக்கு குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும் அல்லது அந்த வகையை சேர்ந்த நுகர்வோரின் மின் கட்டணத்தை கணிசமான அளவில் குறைக்க வேண்டும் என மக்கள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று (27.06) கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக்கு செவிமடுக்கும் கூட்டத்தின் போதே இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாவது மின் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், முதலில் மக்களின் கருத்துக்களைக் கேட்கும் வகையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த பொது அமர்வை நடத்தியது.

இந்த நிகழ்வில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்கள், மின்சாரத்துறை தொடர்பான பலர் கலந்து கொண்டு மின் கட்டண திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மின்சாரக் கட்டணத்தை 3% போன்ற சிறிய தொகைக்குக் குறைக்கக் கூடாது என்றும் மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் மின் கட்டணத்தைக் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைகுழு பாடுபட வேண்டும் என்றும் அங்கிருந்த அனைவரும் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்ததுடன், குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply