சுகாதார அமைச்சரின் செயற்பாடு ஓரளவே திருப்தி அளிக்கிறது – திலீபன்

இலங்கையின் சுகாதார அமைச்சரின் செயற்பாட்டில் ஓரளவே திருப்தி கொள்ள முடியும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் மயக்கமருந்து கொடுக்கப்பட்டு இரு தாய்மார்கள் உயிரிழந்தமை குறித்து கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘சுகாதார அமைச்சரின் செயற்பாடு ஓரளவே திருப்தி அளிக்கின்றது. ஏனெனில் பின்தங்கிய வைத்தியசாலைகளை சென்று பார்வையிடுவதில்லை. உத்தியோகத்தர்களையும் அனுப்புவதில்லை.

இதனால் ஜனாதிபதிக்கும் எங்களை போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தான் இவ்வாறான பிரச்சனைகள் வரும். ஜனாதிபதியுடனான் சந்திப்பில் இதில் பிழை இருக்குமானால் நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை நலனுதவி செயற் திட்டங்களில் நடைபெற்றுள்ள முறைக்கேடுகளால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்தும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ”இந்த திட்டம் நல்ல பயனுள்ள திட்டம். ஜனாதிபதியால் கொண்டு வரப்பட்ட திட்டம். அதற்காக ஜனாதிபதி கிராமம் கிராமமாக சென்று பதிவு எடுக்கமுடியாது.
அதனால் அந்த பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.

ஏற்கனவே உள்ள சமுர்த்தி பட்டியலை எடுத்து அதில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், விசேட தேவைக்குட்பட்டோர், முதியோர் பெயர்களை தெரிவுசெய்து அதன் பின்னர் கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டு பதிவு செய்து அதன் பின்னர் ஏனையவர்களை பதிவு செய்திருக்க வேண்டும்.

ஆனால் பிரதேச செயலாளர்கள் கண்காணிப்பற்று மேற்பார்வை செய்யாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கிராம சேவகர் சமுர்த்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி இந்த வேலைத்திட்டத்தினை செய்ய விடாமல் பூதாகாரமாக்கி உள்ளனர்.

எனினும் ஜனாதிபதி ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் போது விடுபட்ட பயனாளிகளை மீள இணைப்பதற்கான அழுத்தத்தினை கொடுப்போம்’ எனத் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply