மாணவிகளுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சம்பியன் பட்டம் பன்சேனை பாரி வித்யாலய அணிக்கு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் உதைப் பந்தாட்ட அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு கடந்த (01.07) திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் ஸ்தாபனத்தினரின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த (02.07) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் 4 கல்வி வலயங்களில் இருந்து 16 பாடசாலைகள் கலந்து கொண்டதுடன், போட்டிகள் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டு இரண்டு நாட்களாக இடம்பெற்றது.

16 பாடசாலை அணிகள் மோதிய இத்தொடரில் நகர்ப்புற தேசியப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு பலத்த போட்டியின் மத்தியில் 03/00 கோள் வித்தியாசத்தில் முதலாவது இடத்தை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட மட்/பன்சேனை பாரி வித்யாலய அணியினர் பெற்றுக்கொண்டு வெற்றி கிண்ணத்தையும் 100,000/= பெறுமதியான விளையாட்டுப் பொருட்களையும் தம்வசப்படுத்தி கொண்டனர்.

மட்/ முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலய அணியினர் இரண்டாவது இடத்தை பெற்று வெற்றிக் கிண்ணத்தையும் 75,000/= பெருமதியான விளையாட்டு உபகரணங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மூன்றாவது இடத்தை மட்/கட்டு முறிவு குளம் அ.த.பாடசாலை இத்தொடரில் நான்கு போட்டிகளில் கலந்து கொண்டு 06/00, 05/00, 01/01 ,00/06 கோள்களை பெற்று மொத்தமாக இத்தொடரில் 18 கோள்களை போட்டு மூன்றாவது இடத்தை பெற்று 55,000/= பெருமதியான விளையாட்டு உபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் இத்தொடரில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இத்தொடரின் சிறந்த தொடர் ஆட்டநாயகியாக ஏஸ்.ரூவனிதா மற்றும் இறுதிப் போட்டியின் சிறந்த ஆட்டநாயகியாக பி.ரேணுஸ்கா மற்றும் இத்தொடரின் சிறந்த கோல் கீப்பர் ஆக ஆர்.பிரியதர்ஷனா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இத்தொடரில் அதிகூடிய கோள்களை பெற்ற என்.நந்தினிக்கு அவரின் திறமைக்கான அங்கீகாரமாக துவிச்சக்கர வண்டி சிறப்பு பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.

வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் ஸ்தாபகர் சண்முகம் காசிப்பிள்ளை,
வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் பங்குதாரர்களான கா.சதீசன், கா.வித்தியா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டுக்கான உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவக்குமார், கல்குடா உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் த.ரமேஸ், மட்டக்களப்பு மேற்கு உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் சதாசிவம் சந்திரகுமார், பட்டிருப்பு உடற்கல்வி உதவி பணிப்பாளர் ஆர். உதயகுமார், உதவி ஆணையாளர் தலைமை அலுவலகம் சந்திர ஸ்ரீ சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் பணிப்பாளர்களான எஸ்.ரஞ்சன், ஈ.சிவநாதன், கோட்டமுனை விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பீ.சடாட்சரராஜா, செயலாளர் வீ.ஜெயதாசன், நடுவர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் உதவிகளுடன் இத்தொடர் சிறப்பாக நடாத்தி வைக்கப்பட்டது. மேலும் இப்போட்டிகளை பார்வையிட ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலைகளின் பழைய மாணவர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply