வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும், பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (03.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், வவுனியாவில் அண்மைக்காலமாக ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது. அந்த அமைப்பு தொடர்பாக முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்தமைக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன்.

இந்து பௌத்த சங்கம் என்ற பெயரில் அண்மைகாலமாக ஆலயங்களின் திருவிழாக்களில் நிர்வாகத்தினரின் அனுமதியின்றி ஆலயங்களில் பதாதை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.

இந்து பௌத்த சங்கம் என்று இயங்கும் அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை பின்புலமாக கொண்ட அமைப்பு. குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் இருந்த தாகசாந்தி நிலையத்தில் கூட இந்த அமைப்பு தனது பதாதையை போட்டிருந்தது.

இதை நான் அவதானித்து எனது முகப்புத்தகத்தில் ஒரு அரசியல் செயற்பாட்டாளராக பொது மக்களுக்கான பொது பிரச்சனை என்ற அடிப்படையில் பதிவேற்றியிருந்தேன்.

அதற்காக இந்த அமைப்பு சார்ந்து இயங்கும் சில நபர்கள் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்து விசாரிக்கப்பட்டது. அதற்கான வாக்குமூலம் பெறப்பட்டது. உண்மையில் இந்த அமைப்பு அண்மைக்காலமாக கணிசமான ஆலயங்களில் இந்த பதாதைகளை தொங்க விடுவதை காண்கின்றோம்.

முற்று முழுதாக தமிழர் தாயகத்தில் ஒரு பௌத்த மயமாக்கலை மேற்கொள்வதற்காக திட்டமிட்டு இயங்கும் அமைப்பாக குற்றம் சாட்டுகின்றோம்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்த அமைப்புக்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம். உண்மையில் நாங்கள் பௌத்த மத்திற்கோ, அதன் இனத்திற்கோ எதிரானவர்கள் இல்லை. பௌத்தம் போதிக்கும் சிந்தனைகளை சிங்களவர் பின்பற்றி இருந்தாலே தமிழர் தாயகத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் நடைபெறாது என்பது எங்களுடைய கருத்து.

தேவையற்ற விதத்தில் சைவ ஆலயத்தில் பௌத்த மதத்தை சேர்க்க வேண்டிய தேவை என்ன..? சைவ ஆலயங்களில் சரியான முறையில் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

இங்கு ஏன் இந்த அமைப்பு? எதற்கு வந்து தாகசர்ந்தி, சாப்பாடு வழங்குவதாக செயற்படுவது. திட்டமிட்டு பௌத்தமயமாக்கலுக்கும், விகாரைகளை கட்டுவதற்குமான செயற்பாடுகளை நகர்த்துவதற்கே.

பௌத்தமயமாக்கலை செய்வதற்காகவும் மத நல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகவே இந்த அமைப்பு செயற்படுகிறது. பொலிசாரின் வாக்குமூலத்திலும் இதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

வவுனியா, குருமன்காடு சித்தி விநாயகர் ஆலயத்தின் தாகசாந்தி நிலையத்தில் இந்த அமைப்பின் பதாதை அனுமதி பெறாது தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் ஆலயத்தின் உப செயலாளர் அதனை அகற்றியிருந்தார்.

அவர் பொலிசாரின் துணையுடன் மிரட்டப்பட்டு ஆலயநிர்வாக அனுமதி இல்லாமல் மீளவும் பதாதைகளை கட்டியுள்ளார்கள். நந்திக் கொடிகள் காணப்பட்ட இடத்தில் வீதிக்குரிய இடம் எனக் கூறி அப் பதாதை கட்டப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply