கிரிக்கெட் உலகக்கிண்ணத்தில் நெதர்லாந்து

ICC உலகக்கிண்ணம் 2023 தொடருக்கு பத்தாவது நாடாக நெதர்லாந்து அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்தாவது தடவையாக நெதர்லாந்து அணி உலக்கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஸ்கொட்லாந்து அணி தெரிவாகும் அதிக வாய்ப்புகளை கொண்டிருந்த நிலையில், நெதர்லாந்து அணி இறுதி நேரத்தில் அதிரடி காட்டி தமக்கு தேவையான ஓட்ட நிகர சராசரி வேகத்தை பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளதுடன் உலகக்கிண்ணத்துக்கும் தெரிவானது.

பஸ் த லீடாவின் அதிரடியான துடுப்பாட்டம் மற்றும் அவரின் பந்துவீச்சு நெதர்லாந்து அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்தது. முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றது. இதில் ப்ரண்டன் மக்மலன் 106 ஓட்டங்களையும், ரிச்சி பெரிங்டன் 64 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பஸ் த லீடா 5 விக்கெட்களையும், ரியான் க்ளெய்ன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் பஸ் த லீடா 123 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். நெதர்லாந்து அணி துரத்தியடித்து வெற்றி பெற்ற வேளையில் ஒரு துடுப்பாட்ட வீரரினால் பெறப்பட்ட கூடுதலான ஓட்டங்கள் இதுவாகும். விக்ரம்ஜித் சிங் 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் மிக்கேல் லீஸ்க் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

4 ஓவர்களில் 50 ஓட்டங்களை பெற்றாலே உலகக்கிணத்துக்கு தெரிவாக முடியுமென்ற நிலை ஏற்பட்டது. அதிரடியாக பஸ் த லீடா மற்றும் ஸகீப் சுல்பிகீர் ஆகியோர் அதிரடி நிகழ்த்தி 14 பந்துகளில் வெற்றியினை பெற்றனர். யாரும் எதிர்பாராத வெற்றியாக இது அமைந்தது.

6 புள்ளிகளை நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, சிம்பாவே அணிகள் பெற்றுக் கொண்டன. மூன்று அணிகளுக்குமிடையிலான ஓட்ட நிகர சராசரி வேகம் சிறிதளவிலாகவே காணப்பட்டது. முன்னணியில் காணப்பட்ட நெதர்லாந்து அணி இரண்டாமிடத்தை பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி உலகக்கிண்ண வாய்ப்பை பெற்றுள்ளது.

முதலாமிடத்தை பெற்ற இலங்கை மற்றும், இரண்டாடமிடத்தை பெற்ற நெதர்லாந்து அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply