முல்லைத்தீவு மாவட்டத்தில், சில இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள, பாரிய விகாரைகளின் கீழ் பகுதிகள் மனிதப் புதைகுழிகளாக இருக்கலாமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வட்டுவாகல் மற்றும், கேப்பாப்புலவு உள்ளிட்ட இராணுவ முகாம்களில் பாரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரைகளைச் சுட்டிக்காட்டிய ரவிகரன், இராணுவ முகம்களில் பாரிய அளவில் விகாரைகள் நிர்மாணிக்கப்படவேண்டியதன் அவசியம் என்ன? எனவும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் நீண்ட காலமாக கொக்குத் தொடுவாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு சூனியப் பகுதியாக காணப்பட்டது எனக் கூறிய அவர், இறுதி போரில் சரணடைந்தவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு இந்த சூனியப் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.