கைதான மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க தமிழக முதல்வர் கடிதம்

நேற்று(09.07) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரையும் அவர்களது இரு படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் S.ஜெய்ஷங்கருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று(10.07) கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யதமை தமிழக மீனவர் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா-இலங்கை கடற்பரப்பு எல்லையில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து தமது வாழ்க்கையை நகர்த்தி செல்கின்றனர். இவ்வாறான நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்வதாகவும், இவ்வாறான கைதுகள் தொடர்வதாகவும் மீனவர்கள் மத்தியிலும் அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது என ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

“இராஜதந்திர வழிகள் மூலம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நட்புறவான இருதரப்பு உறவுகளைப் பேணுவதன் மூலம் எமது மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை மதிக்கும் இணக்கமான தீர்மானத்தை எட்ட முடியும். எனவே உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply