காற்பந்தின் மூன்று துருவங்கள் இணைந்தன! தேர்தல் விரைவில்!!

சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தடைக்கு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் உள்ளாகியுள்ள நிலையில் தமுக்குள் நீண்ட நாட்களாக போட்டியிட்டு வரும் முக்கியமானவர்கள் மூவர் ஒன்றிணைந்துள்ளனர்.

இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தடையை நீக்கி, மீண்டும் இலங்கையில் காற்பந்தாட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக இந்த நிலைப்பாட்டுக்கு தாம் வந்ததாக இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களான ஜஸ்வர் உமர், ரஞ்சித் ரொட்ரிகோ மற்றும் களுத்துறை லீக் தலைவர் வைத்தியர் மணிலால் பெர்னாண்டோ ஆகியோர் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி சனிக்கிழமை பெத்தகான காற்பந்து நிலையத்தில் நடைபெற்ற இலங்கையின் காற்பந்து லீக் அங்கத்துவர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் சந்திப்பில் இந்த விடயங்களை அவர்கள் முன் வைத்தனர்.

குறித்த சந்திப்பில் 64 லீக் சார்பானவர்கள் நேரடியாக வருகை தந்து அடுத்த நிர்வாக தெரிவுக்கான தேர்தலில் ஒரு அணியாக போட்டியிடுவதற்கு ஆதரவு தருவதாக உறுதி மொழி வழங்கியுள்ளனர். வருகை தராத 3 அமைப்புகள் தாம் இந்த போட்டியின்றிய நிர்வாக தெரிவுக்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறியுள்ளதாக முன்னாள் தலைவர் ஐஸ்வர் உமர் குறித்த கூட்டத்தில் தெரிவித்தார். ஐந்து லீக்குகள் மட்டுமே இந்த நிலைபப்ட்டுக்கு சம்மதம் தெரிவிக்கவிலை எனவும் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே தலைவர் பதவியிலிருந்த ஒருவர் மீண்டும் தனக்கே அந்தப் பதவி தேவையென கூறியதாக தெரிவித்த மணிலால் பெர்னாண்டோ, அவர் தனது லீக்கை சீர் செய்து அதன் மூலம் இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் ஊடாக காற்பந்துக்கு சேவையாற்றினால் அதன் மூலம் அவர் எதிர்காலத்தில் தலைவர் பதவியினை பெற முடியுமெனவும் தான் அவருக்கு கூறியதாக நிகழ்வில் மணிலால் பெர்ணாண்டோ மேலும் தெரிவித்தார்.

இலங்கை காற்பந்து சம்மேளனத்துக்குள் ஒற்றுமையற்ற நிலைமை காணப்பட்டமை, பிரிவினைகள் காணப்பட்டமை இலங்கை மீதான தடைக்கு ஒரு காரணமாக அமைந்ததாகவும், ஐஸ்வர் உமர் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்படுவோம் என்ற உறுதி மொழியை வழங்கிய பின்னரே சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை விளையாட்டு துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தலை நடாத்துவதற்கான அவருக்கான வேலைகளை நிறைவு செய்துளளதாகவும், தேர்தலை நடாத்துவது பொது காற்பந்தாட்ட சம்மேளனத்தின் சபையின் கைகளிலேயே உள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தடையை நீக்கி, இலங்கை அணியை உலகக்கிண்ண தெரிவுகாண் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்க சர்வ்தேச காற்பந்தாட்ட சம்மேளனம அனுமதி வழங்க தயாராகியுள்ளது. ஆனால் அதற்கு 10 தினங்களுக்கு முன்னர் தேர்தல் நடாத்தப்பட்டு சரியான நிர்வாகம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு குறுகிய காலப்பகுதியாக காணப்படுவதனால், எதிர்வரும் 14 ஆம் திகதி விசேட பொதுக் கூட்டத்தை நடாத்தி அதில் முக்கிய முடிவுகளை எடுத்து தேர்தலை நடாத்துவது என்ற முடிவும் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

ஒக்டோபர் முதலாம் திகதி இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்துக்கான தேர்தலை நடாத்துவது எனவும் தற்போதைய நிலையில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் தலைவர் பதவி மீது ஆசை உள்ள போதும், தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு அந்த ஆசைகளை கைவிட்டு சகலரும் ஒரே அணியாக தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்டிரிக்கோ தெரிவித்தார்.

சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய காற்பந்தாட்ட சம்மேளனம் ஆகியன விளையாட்டு துறை அமைச்சர் அடங்கிய குழுவினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

புதிய யாப்பு தயாரிக்கப்பட்டு அது விளையாட்டு துறை அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தம் மீது தடை விதிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலைநீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரஞ்சித் ரொட்ரிகோ முன்வைத்திருந்தார்.

Social Share

Leave a Reply