இலங்கையின் திறமையான தையல்காரர்களுக்கு 700 வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ரஷ்யாவுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் பிராந்திய அரசாங்க அதிகாரிகளுடன் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் (SLFEA) இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்பு முயற்சியின் கீழ், ரஷ்ய செல்பவர்கள் நிஸ்னி நோவ்கோரோட் பகுதியில் அமைந்துள்ள இரண்டு புகழ்பெற்ற ஆடை உற்பத்தி நிலையங்களில் தொழிலுக்கு அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் திறமையான தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொறிமுறையை வகுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வருவதாக மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.