விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த நபர் ஒருவர் பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று (17.08) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
38,000 ரூபாவுக்கு ஊக்க மருந்துகளை ஊசி மற்றும் மாத்திரை வடிவில் விற்பனை செய்யச் சென்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்த நிறுவனம் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவரக அதிகாரிகள் இணைந்து பொரளை பகுதியில் சுற்றிவளைப்பு நடத்தி மற்றுமொருவரை கைது செய்துள்ளனர்.
அவர் மேலதிக விசாரணைக்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் ஆண்மைக்குறைவு, புரோஸ்டேட், சிறுநீரகம் மற்றும் விரைகளில் மாற்றங்கள் போன்ற நோய்களை ஏற்படுத்துவதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.