சீனா, ஹஞ்ஜோங்கில் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி தொடருக்கான அறிமுக நிகழ்வு நேற்று(28.08) கொழும்பு தேசிய ஒலிம்பிக் சம்மேளன டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
காலை வேளையில் சுதந்திர சதுக்கத்தில் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றவுள்ள வீர, வீராங்கனைகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
21 விளையாட்டு நிகழ்வில் 97 வீர வீராங்கனைகள் மற்றும் 58 உத்தியோகஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த 93 வீர, வீராங்கனைகளில் கிரிக்கெட் ஆண்கள்-பெண்கள், ரக்பி ஆண்கள் அணியினரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மெய்வல்லுனர் போட்டிகளில் 16 போட்டியாளார்கள் பங்குபற்றுகிறார்கள். ஆண், பெண் கிரிக்கெட் போட்டிகளில் 30 வீர வீராங்கனைகளும், ரக்பி போட்டிகளில் 12 வீரர்களும் பங்குபற்றுகிறார்கள்.
481 தங்க பதக்கங்களுக்காக 47 ஒலிம்பிக் குழுக்களை பிரதிநிதித்துவம் செய்து 12,500 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
இலங்கை அணிக்கு DSI நிறுவனத்தின் அவி உற்பத்திகள் உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளர்களாக கைகோத்துள்ளனர். ஆரம்ப நிகழ்வின் ஆடை அனுசரணையாளர்களாக லொவி தயாரிப்பு நிறுவனம் இணைந்துள்ளது.
இம்முறை போட்டி முறையில் உத்தியோகபூர்வ ஆடை வடிமைப்பு செய்யப்பட்டு முதலிடத்தை பெற்றுக்கொண்ட வடிவமைப்பே உத்தியோகபூர்வ ஆடையாக தயாரிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற நிகழ்வில் இந்த விளையாட்டு நிகழ்வுக்கான ஆடைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அதேவேளை, வீர வீராங்கனைகள் போட்டிகளில் பங்குபற்றுவது மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள், ஒலிம்பிக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் கருத்தரங்கும் ந்டைபெற்றது.
இந்த நிகழ்வில் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் K.மகேசன், அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஷெமால் பெர்னான்டோ, ஒலிம்பிக் சம்மேளன தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் மக்ஸ்வெல் டி சில்வா, ஆசிய விளையாட்டுகளுக்கான பிரதானி நிஷாந்த பியசேன ஆகியோரும் கலந்து கொண்டனர்.