இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதற் தடவையாக இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிராக ஒரு தொடர் வெற்றியினை பெற்று சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிராக நேற்று(06.09) இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான 20-20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-1 என இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து மகளிர் அணிகெதிரான முதல் வெற்றியை இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, இந்த தொடர் வெற்றியின் மூலம் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் தொடர் வெற்றியினை பதிவு செய்துள்ளது.
சாமரி அத்தப்பத்துவின் மிக அபாரமான துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு மூன்றாவது போட்டியை மட்டுமல்லாமல் தொடர் வெற்றியினையும் பெற்றுக் கொடுத்துள்ளது. அவரே போட்டியின் நாயகியாகவும், தொடர் நாயகியாகவும் தெரிவானார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் மாய்யா பௌசியார் 23 ஓட்டங்களையும், அமி ஜோன்ஸ் 20 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் சாமரி அத்தப்பத்து 3 விக்கெட்களையும், உதேஷிகா பிரபோதினி, கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக அமைந்தது. சாமரியின் அதிரடியுடன் 65 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். சாமரி அத்தப்பத்து 44 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம 26 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்சீவனி 20 ஓட்டங்களையும் பெற்றனர். இதன் மூலம் இலங்கை அணி 17 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சாரா க்லென் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இரு அணிகளுக்குமிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடர் 09 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.