குளிர்காலம் நெருங்கும் நிலையில் கொரோனா தொற்று பரவல் குறித்த எச்சரிக்கைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுகள் வேகமாக பரவும் நிலையில், தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளது.
பல நாடுகள் கொரேனா தொற்று பரவல் குறித்த தகவல்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும், தரவு குறைவாக இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான மக்கள் தற்போதும் கொவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்திற்கு முன்னதாக கொவிட்-19 க்கான போக்குகள் குறித்து கண்காணிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இறப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஐரோப்பாவில் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கைகள் அதிகரித்து வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
43 நாடுகள் மட்டுமே கோவிட் இறப்புகளின் எண்ணிக்கைகையை சுகாதார ஸ்தாபனத்திற்கு தெரிவிப்பதாகவும், 20 நாடுகள் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்படுவது பற்றிய தகவல்களை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.