கிளிநொச்சி மாவட்ட செயலமும், “ஏழ்மைக்கு உதவும் உறவுகள்” அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த கலைஞர்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று(27.09) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
ஏழ்மைக்கு உதவும் உறவுகளின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா அதிதியாக கலந்து கொண்டு குறித்த உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
சுவிஸ் நாட்டைச்சேர்ந்த “தமிழர் கலை கலாச்சார மன்றம்” ஊடாக விஜய் குணனனின் 15வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தாரின் நிதி அனுசரணையில் குறித்த உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட 22 கலைஞர்களுக்கு இவ்வாறு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலகமும், மாவட்ட கலாசார அதிகார சபையும் இணைந்து வெளியிட்ட “கிளிமலர்” நூலொன்று ஏழ்மைக்கு உதவும் உறவுகளின் அலுவலகத்திற்கு உதவி மாவட்ட செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கா.இராசதுரை, கரைச்சி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் வே.தர்மபாலன், ஏழ்மைக்கு உதவும் உறவுகளின் இலங்கைக்கான இயக்குநர் .உசா சசிக்குமார் மற்றும் ஆலோசகர் வே.வசந்தரூபன், மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.