தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத் தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்பொழுது வெளிப்படையாக தெரியவந்துள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
உண்மையிலேயே இந்த நாட்டில் நீதித்துறை நேர்மையாக இருக்கின்றதா என கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீதிபதியின் பதவி விலகல் கருத்துக்களை பார்க்கின்ற போது சட்டமா அதிபர் கூட இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை அறியக்கூடியதாக உள்ளது. நீதித்துறை எங்கே செல்கிறது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அவர் தமிழ் பிரதேசத்தில் இருந்து கொண்டு நியாயமான தீர்ப்பை வழங்குகின்ற நிலையில் தென்னிலங்கையிலே இனவாதமாகவும், அவர் ஒரு தமிழராகவும் பார்க்கப்படுகின்ற நிலை காரணமாகவே அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் என இன்று(29.09) மன்னரிலுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
நீதித்துறை என்பது நியாயமான வகையில் செயற்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் நீதித்துறையை நம்பித்தான் இன்றைக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். ஆனால் இப்பொழுது இருக்கின்ற நிலையை பார்க்கும் போது தமிழ் நீதிபதிகளுக்கு அவர்கள் நியாயமாக செயற்படுகின்ற வாய்ப்பை தடுத்து அவர்களை அச்சுறுத்துகின்ற ஒரு செயற்பாடாகதான் இந்த நீதிபதியின் ராஜினாமா செய்தி கூறுகிறது” என செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுளளார்.
தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத் தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்பொழுது வெளிப்படையாக தெரிகிறது. இது நீதித்துறைக்கு விடப்படும் சவால். ஆகவே நீதியமைச்சர் இந்த விஷயத்தை ஆராய்ந்து நீதிபதியன் பதவி விலகலில் அழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தல் இருக்குமாயின் அவர் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்துளளார்.
இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள இருக்கிறோம். தமிழ் பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இதில் உள்ளடக்கி என்ன செய்யலாம் என்று நாங்கள் ஆராய்ந்து நிச்சயமாக நீதித்துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற இந்த சவாலை முறியடிக்க முயற்சிப்போம் என செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.
நீதி நடுநிலையானது. அது யாருக்கும் தலை சாய்வதில்லை. அந்த வகையில் எங்களுடைய நீதிபதி அவர்கள் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார். அதனாலேயே இத்தனை அச்சுறுத்தல்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. புத்த பிக்குகள் நீதித்துறையை மதிப்பதில்லை என்பதனை இந்த விடயத்தில் பார்க்கக் கூடியதாக உள்ளது. குருந்தூர் மலை தீர்ப்பு பல அழுத்தங்களை அவருக்கு கொடுக்கும் வகையில் இருந்துள்ளது. அத்தோடு பல்வேறு அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. இதில் புத்த பிக்குகளின் கூட்டமும் அடங்குகின்றது என எண்ணுகின்றேன். அத்தோடு புத்த பிக்குகளா இந்த நாட்டை ஆளுகின்றனர் என்ற சந்தேகம் எழுகின்றது எனவும் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அனைத்து நீதிபதிகளையும் காப்பாற்றுகின்ற பொறுப்பு எங்களுடைய மக்களுக்கு இருக்கின்றது. தீர்ப்பு நியாயமாக வழங்கப்பட வேண்டும் என்றால் நீதித்துறைக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளவர்கள் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சட்டமா அதிபரின் அழுத்தம் இதில் உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.எனவே அவரும் ராஜினாமா செய்வது சிறந்தது என்றே நான் கருதுகிறேன். எனவே நாங்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதன் ஊடாகவே நீதித்துறையை நடுநிலைமைக்கு கொண்டு வர முடியும் என கருத்து கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நீதியமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.