ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஸ்ரீலயன்ஸ் அனுசரணையில் 18 வயதுக்குட்பட்ட போட்டி தொடர் நாளை(30.09) கொழும்பு ஹவ்லொக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 16 முக்கிய பாடசாலைகள் இந்த தொடரில் மோதவுள்ளன. அத்தோடு 4 மகளிர் அணிகளுக்கான போட்டிகளும் நடைபெறவுள்ளன.
காலை 7 மணிக்கு ஆரம்ப நிகழ்வுடன் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரை மேல் மாகாண ரக்பி சம்மேளனம் ஏற்பாடு செய்கிறது.
ஸ்ரீ லயன்ஸ் அமைப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கி வருகிறது. அங்குள்ள இலங்கையர்களை இணைத்து பல விளையாட்டு நிகழ்வுகளை செய்து வருகிறது. ரக்பி, கிரிக்கெட், காற்பந்து, நீச்ச்சல், ஹொக்கி, வலைப்பந்து, கூடைப்பந்து, மெய்வல்லுனர் என பல விளையாட்டுகளில் இந்த அமைப்பு பங்களிப்பு செய்து வருகிறது. சர்வதேச வீரர்களை உள்வாங்கி பல போட்டிகளிலும் பங்குபற்றி வருகின்றது ஸ்ரீ லயன்ஸ்.
இலங்கையில் விளையாட்டு அபிவிருத்திக்கு கைகொடுத்து வருகிறது. தாம் விளையாட்டை வளர்க்கும் நோக்கிலேயே இங்கு வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதாகவும், வேறு எந்த அரசியல் நோக்கமும் தமக்கு கிடையாது எனவும் ஸ்ரீ லயன்ஸ் அமைப்பின் ஸ்தாபக தலைவர் வைத்தியர் கெலும் சுஜித் பெரேரா தெரிவித்தார். ஆனால் இலங்கையில் வந்து இவ்வாறு விளையாட்டுக்கு கைகொடுக்கும் திட்டங்களை செயற்படுத்த கடினமாகவுள்ளதாகவும், அதற்கு இடையூறுகளை பலர் ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் கவலை வெளியிட்டார்.
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் கொழும்பில் ஸ்ரீ லயன்சினால் மகளிருக்கான ரக்பி அக்கடமி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள ரக்பி தொடரில் தொடர் நாயகன் விருதை பெறும் வீரருக்கு ஐக்கிய அரபு இராட்சசியத்துக்கு சென்று ஸ்ரீ லயன்ஸ் ஓடு இணைந்து பயிற்சிகளில் ஈடுப்படவும், சர்வதேச ரக்பி வீரர்களோடு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக இந்த போட்டி தொடருக்கான ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்து.
இந்தப் போட்டிகளை பார்வையிட ஸ்ரீ லயன்ஸ் அனைவரையும் அழைக்கிறது.
