ராஜகுமாரி கொலை வழக்கு – பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் தொடர்கிறது

கொழும்பு, வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் வைத்து இறந்த வீட்டுப்பணிப்பெண் ராஜகுமாரி இறப்பு சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் பரிசோதகர்(SI) அடங்கலாக மேலும் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான விளக்கமறியல் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கு கொழும்பு நீதவான் மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த மூவரும் ஏற்கனவே நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது மூன்று சாட்சியாளர்களினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

பதுளையை சேர்ந்த ராஜகுமாரி எனும் பெண் மே மாதம் 11 ஆம் திகதி தனது வீட்டில் தங்க நகையை திருடியதாக சுதர்மா நெத்திகுமார என்பவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து மழுங்கிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டு அதன் மூலமான அதிர்ச்சியினால் இறந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அவர் சித்திரைவதை செய்யப்பட்டு இறந்திருக்கலாமென சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

Social Share

Leave a Reply