இலங்கை இளைஞர்களை தொழில்சார் அறிவுடன் வலுவூட்டுவதற்காக தேசிய இளைஞர் படைக்கும் சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ கல்விக்கூடத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை இளைஞர்கள் மற்றும் முன்னணியில் உள்ளவர்களுக்கு ஹோட்டல் துறை பற்றிய பரந்த புரிதலையும் நடைமுறை அறிவையும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகளைப் பெறும் நோக்கில் தேசிய இளைஞர் படைக்கும் சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ கல்விக்கூடத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (17.10) விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் சுவிஸ் அரசாங்கம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் உள்ள தேசிய இளைஞர் படை மற்றும் Baurs வர்த்தக அமைப்பு ஆகியவற்றால் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பயிற்சிக்கான செலவை அவர்கள் ஏற்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
தொழில்சார் துறையில் நாட்டின் இளைஞர்களை வலுப்படுத்துவதற்கான சவால்களில் வெற்றிகரமான படிகளில் ஒன்றாக இது அமைவதுடன், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நாட்டிற்கு பெரும் உதவி கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்தின் துணைத் தூதுவர் ஒலிவியர் ப்ராஸ், இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்தின் முதல் செயலாளர் டோரிஸ் மனோர், பௌர்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரோல்ஃப் பிளேசர், செயலாளர் கே.மகேசன். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் படையின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க, அதன் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இணைந்து கொண்டனர்.