இந்தியா, அவுஸ்திரேலியா இறுதிப் போட்டி ஆரம்பம்

இந்தியா, அவுஸ்திரேலியா இறுதிப் போட்டி ஆரம்பம்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இந்தியா, அஹமதாபாத்தில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இந்தியா அணி முதலில் துடுப்பாட விரும்பியதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

அணி விபரம்

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி

அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், மிற்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட்,  க்ளென் மக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

2023 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்குத் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் தெரிவாகியுள்ளன. நியூசிலாந்து அணியை வென்று இந்தியா அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அவுஸ்திரேலியா அணி தென்னாபிரிக்கா அணியை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுளளது.

இந்தியா அணி இந்த உலகக்கிண்ண தொடரில் தோல்விகளின்றி 10 வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்குத்தகுதி பெற்றுள்ளது. அவர்களுக்கு இது நான்காவது இறுதிப் போட்டி. 1983 ஆம் ஆண்டு முதற் தடவை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வெற்றி பெற்றார்கள். அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவர்கள் அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தார்கள். அதன் பின்னர் இரு அணிகளும் இறுதிப் போட்டியில் இம்முறை சந்திக்கின்றன. 2011 ஆம் ஆண்டு இந்தியா அணி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றதன் பின்னர் இந்த முறை மீண்டும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இந்த முறை உலகக்கிண்ணத்தை வெல்லும் முதல் வாய்ப்புள்ள அணியாகவே இந்தியா அணி உலகக்கிண்ண தொடரில் களமிறங்கியது. அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.

அவுஸ்திரேலியா அணி உலகக்கிண்ணம் என்று வந்தால் விஸ்வரூபம் எடுப்பார்கள். இம்முறையும் அதனை நிரூபித்துள்ளளார்கள். முதலிரு போட்டிகளிலும் தோல்வியை சந்திக்க அவுஸ்திரேலியாவின் ஆட்டம் இந்தமுறை அவ்வளவுதான் என்றே கூறப்பட்டது. அவர்கள் தென்னாபிரிக்கா அணியுடன் முதல் சுற்றில் தோல்வியை சந்தித்தார்கள். ஆனால் அதனை தொடர்ந்து 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டி வரை முன்னேறி வந்துளளர்கள். ஐந்து முறை சம்பியனாக கிண்ணத்தை வென்றவர்கள். இரண்டு முறை இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டவர்கள். 1996 ஆம் ஆண்டு இறுதி போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியடைந்த பின்னர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நான்கு தடவைகளும் கிண்ணத்தை சுவீகரித்துளள்னர்.

இந்தியா அணி துடுப்பாட்டம் பந்துவீச்சு என இரு பக்கமாகவும் முழுமை பெற்ற அணியாக காணப்படுகிறது. களத்தடுப்பும் சிறப்பாகவே அமைந்திருப்பது மேலதிக பலம். சகல துடுப்பாட்ட வீரர்களும் ஓட்டங்களை பெற்று நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீச்சு நல்ல பலமானதாக காணப்படுகிறது. இந்தியாவில் அவர்கள் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா பலமாகவே களமிறங்கும். போட்டி நடைபெறவுள்ள மைதானம் 132,000 ரசிகர்களை கொள்ளக்கூடியது.

அவுஸ்திரேலியா அணி உலகின் எந்த மைதானங்களிலும் விளையாடக்கூடியயது. அந்த அணியின் வீரர்கள் அந்தந்த இடங்களுக்கு ஏற்றால் போல் விளையாடுவார்கள். பலமான நீண்ட துடுப்பாட்ட வரிசை அவர்கள் பலம். ஆனால் அனைவரும் சிறந்த துடுப்பாட்ட நிலையில் காணப்படுகிறார்களா என்பது கேள்வியே. பந்துவீச்சு என்பது எப்போதுமே அவர்களுக்கு பலமானது. அந்த பந்துவீச்சை வைத்து பலமான இந்தியாவின் துடுப்பாட்ட வரிசையை தகர்த்தால் வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளுவார்கள்.

போட்டி நடைபெறவுள்ள மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானம். ஓட்டங்கள் அள்ளிக்குவிக்கப்படும். ஆகவே இரு அணியையும் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இந்தியா அணியின் பலம் அதிகமாகவே காணப்படுகிறது. 11 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று வெற்றி பெறப்போகிறார்களா அல்லது அதற்கு அவுஸ்திரேலியா முடிவு கட்டுமா?

Social Share

Leave a Reply