மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் ஏற்பாட்டில் சர்வதேச மீனவர் தின நிகழ்வு இன்று (21.11) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற்றுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ மீனவ சமூகம் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பெரும்பங்காற்றி வருவதாகவும்,அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்றும், வேறு கடற்பரப்பில் காணப்படாத அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் எமது மன்னார் கடற்பரப்பில் காணப்படுவதால் அவற்றினைப் பாதுகாத்து எமது எதிர்காலச் சந்ததிக்கும் விட்டுச் செல்வது நமது கடமை என்றும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பாவிப்பதால் நமது முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற கடல் வளங்களை நமது சந்ததியினருக்கும் வழங்க முடியாத நிலை உருவாகலாம் என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் விஸ்வலிங்கம் கலிஸ்ரன். மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பாலச்சந்திரன் நிருபராஜ் வட மாகாண உதவிப்பணிப்பாளர், நீரியல் உயிர்வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை. திருச்செல்வம் வித்தகன் கலாநிதி, உதவி ஆணையாளர் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மன்னார். ஜோசப் டானியல் அமுதன், கரையோரப்பாதுகாப்பு உத்தியோகத்தர் – மன்னார். மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் ,சமூகச் செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பெண்களினால் பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் குறிப்பாக மீனவ சமூகப் பெண்கள் குறித்த நிகழ்வில் பெருமளவில் பங்கேற்றிருந்தனர்.

