240 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் 150 பேரை விடுவிக்க ஹமாஸ் போராளிகள் ஒப்புக் கொண்டதன் மூலம் நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா பகுதி மீதான தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் அரசு விருப்பம் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை எனவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகக் சிறைபிடித்ததை தொடர்ந்து, ஹமாஸ் போராளிகளை வேரறுக்கும் நோக்கிலும், ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை மீட்கும் நோக்கிலும் இஸ்ரேலியப் படைகள் காஸாவை வான்வழியாகவும் தரைவழியாகவும் தொடர்ந்தும் தாக்கி வருகின்றன.
ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரை நிறுத்த கட்டார் நாட்டு அதிகாரிகள் நடுநிலையாக செயற்பட்டு வருவதுடன், போரை முற்றிலுமாக நிறுத்த கட்டார் புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக இஸ்ரேல் அமைச்சரவை கூடி தீர்மானித்து, நான்கு நாள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.