சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு..!

சிறைச்சாலைகள் தொடர்பில் நாளை மற்றும் நாளை மறுதினம் பொலிஸாருடன் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் கைதிகளை பார்வையிடுவதற்கு அதிகளவான பார்வையாளர்கள் வரக்கூடும் என்பதால், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய அனைத்து சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என அதன் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளை மற்றும் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு திறந்த வெளி பார்வையாளர்களை காண்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிறைச்சாலை விதிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு கைதிக்காக மூன்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதியின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு ஒருவருக்கேற்ற அளவில் மாத்திரமே கொண்டு வரப்பட வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட பொருட்களை சிறை வளாகத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply