தற்கொலைக்கு தூண்டும் மதப் பிரச்சாரம்!

மஹரகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் விஷம் அருந்தி இளைஞனும், யுவதியும் உயிரிழந்துள்ளதுடன், குறித்த மரணங்கள் தற்கொலைகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மாலபே, பிட்டுகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தாயொருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இந்த மரணங்களுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகிறது.

மத போதகரான குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதை தொடர்ந்து மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொட்டாவ, மகும்புர பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்த 46 வயதான ருவன் பிரசன்ன குணரத்த கடந்த 28ஆம் திகதி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இவர்கள் பொலன்னறுவை பிரதேசத்தில் வசித்ததாகவும், வெளிநாடு செல்வதற்காக சில மாதங்களுக்கு முன்னர் தற்காலிக வதிவிடத்திற்காக ஹோமாகம பிரதேசத்திற்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ருவன் பிரசன்ன குணரத்னவும் சமய பிரச்சாரங்களை ஆற்றியவர் என்பதுடன் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அவரது சமய பிரச்சாரங்களில் கலந்துகொண்ட ஒருவர் என கூறப்படும் நபரின் சடலமும் மஹரகம ரயில் நிலைய வீதியிலுள்ள விடுதி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரும் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அம்பலாங்கொட வட்டுகெதர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹரகம பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்த அவர், மாலை ஆறு மணியளவில் செல்வதாக விடுதி ஊழியர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் வெளியில் வராததால் சந்தேகமடைந்த ஊழியர் ஒருவர், சம்பந்தப்பட்ட அறையை சோதனையிட்டபோது படுக்கையில் கிடப்பதைப் பார்த்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதன்படி, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கடந்த 28ம் திகதி உயிரிழந்த ருவன் பிரசன்னவின் இறுதிக் கிரியைகளில் உயிரிழந்த இளைஞரும் கலந்துகொண்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் இறந்த இடத்தில் சயனைட் என சந்தேகிக்கப்படும் ஒரு பொருள், ஒரு தண்ணீர் போத்தல் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, ருவான் பிரசன்ன குணரத்தவின் சமய பிரச்சாரத்தில் கலந்து கொண்ட 21 வயதுடைய மற்றுமொரு யுவதியும் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி யக்கல ரஃபல்வத்த பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ருவன் பிரசன்ன குணரத்தவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்த இளைஞன், யுவதி உட்பட அனைவருக்கும் விஷம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவ பிரதேசத்தில் விஷம் அருந்தி உயிரிழந்த ருவன் பிரசன்ன குணரத்னவின் பிரச்சாரங்களை கேட்பவர்கள் இருந்தால் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். .

குறித்த நபர் பல்வேறு பிரதேசங்களில் பிரச்சாரம் செய்துள்ளதாகவும், அவரது பிரச்சாரங்களை கேட்ட பலர் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை உயிரிழந்தவர்கள் அனைவரும் ருவான் பிரசன்ன குணரத்னவின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply