விசேட வைத்திய நிபுணர் ஐக்கிய மக்கள் சக்தியோடு கைக்கோர்ப்பு..!

விசேட வைத்திய நிபுணரான வைத்திய கலாநிதி சமல் சஞ்சீவ ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான பயணத்தில் முன்னோடியாக செயற்பட்டமையினால் தனது தொழிலை இழந்த விசேட வைத்திய நிபுணரான சமல் சஞ்சீவ,ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமை மகிழ்ச்சியென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சமல் சஞ்சீவ,ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து கொள்ளும் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் நாட்டில் கொள்ளையிடப்பட்ட பணமும் வளங்களும் நாட்டுக்கு மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அரச ஊழியராக இருந்த சமல் சஞ்சீவ,சுகாதாரத்துறையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தியதன் காரணமாக அவர் தனது வேலையை இழந்தார் என்றும், ஊழலுக்கு எதிரான பயணத்தை வலுப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் அவர் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் ராஜபக்சர்கள் உட்பட நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்ல காரணமான நபர்களை வெளிக்கொணர முடிந்ததாகவும், சுகாதாரத்துறையில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஊழலையும் மோசடியையும் ஒழிப்பதற்கே ஐக்கிய மக்கள் சக்தி பாடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வைத்திய கலாநிதி சமல் சஞ்சீவ இன்று முதல் அந்தப் பயணத்தின் முன்னோடித் தலைவராக செயற்படுவார் என்றும், இந்த துறையில் பயணிப்பதற்கு அவர் தகுதியானவர் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உப தலைவராகவும்,ஐக்கிய மக்கள் சக்தியின் சுகாதார கொள்கைகள் குழுவின் செயலாளராகவும் வைத்தியர் சமல் சஞ்சீவ நியமிக்கப்பட்டார்.

Social Share

Leave a Reply