இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான தருணம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுவிஸ்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று இடம்பெற்ற “பசுமை தொழில்நுட்ப மன்றத்தில்” கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறு முதலீடு செய்வதால் அடுத்து வரும் தசாப்தங்களில்; பங்குதாரர்களுக்கும் இலங்கையின் நுகர்வோருக்கும் கணிசமான நன்மைகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதற்காக முன்வரும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறை முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் உயர் மட்ட மற்றும் நிலையான கொள்கையை உத்தரவாதம் செய்யும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் ஆற்றல்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைக்கு முதலீட்டுடன் கூடிய சூழலை ஏற்படுத்த கடந்த 2 ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
இலங்கை தனது நிலையான, பசுமையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான இலட்சியத் திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும், 2050 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதில் உறுதியாக உள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
துரித புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டம் முயற்சியின் ஒரு முக்கிய அங்கம் என்றும், இது வலுசக்தி பாதுகாப்பிற்கான பாதையில் இன்றியமையாத நடவடிக்கை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.