எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு இடங்களில் நேற்றிரவு(11) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களிடையேயான மோதல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு துப்பாக்கிப் பிரயோகங்களும் ஒரே குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டிகல மற்றும் அம்பலாங்கொடையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் மூவர் உயிரிழந்ததுடன், 06 பேர் காயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் பிட்டிகல – குருவல பகுதியில் வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
காயமடைந்த இரண்டு ஆண்களும் பெண்ணொருவரும் சிகிச்சைகளுக்காக கல்லிந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அம்பலாங்கொடை – கலபொட பகுதியில் நேற்றிரவு(11) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த இரண்டு துப்பாக்கிப் பிரயோகங்கள் தொடர்பில் கூட்டு விசாரணையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுமென பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.