கடந்த காலங்களில் முழு நாட்டிற்கும் வைஃபை(WIFI) தருவதாக கூறி மக்களை ஏமாற்றியதாகவும், தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் அரசியல் கட்சிகள் டிஜிட்டல், ஸ்மார்ட், வைஃபை(WIFI) போன்ற விடயங்கள் தொடர்பில் உரையாற்றி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
சமூக ரீதியான கோபம் மற்றும் வெறுப்பு உணர்வின் காரணமாக, இளைஞர்களிடையே கிளர்ச்சிகள் ஏற்படுகின்றமையால், கல்வி ரீதியான ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியதாக அவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போலி சோசலிசவாதிகளை போன்று செயற்படும் அரசியல்வாதிகள், கூறும் விடயங்களுக்கும் செயற்படுத்தும் விடயங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் நிலவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 125வது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை மாத்தறை மாலிம்பட ஸ்ரீ சுமேத மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.